ஏப்ரல் 21 -தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் நாளை மறுதினம் விசேட வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு, பிராந்தியங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான பொதுமக்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை பிற்பகல் 4 மணிதொடக்கம் நாளை மறுதினம் நண்பகல் 12 மணிவரை குறித்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஜிந்துப்பிட்டி சுற்றுவட்டம் ஊடாக கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதல், அத்துடன் ராமநாதன் மாவத்தையில் இருந்து ஹெட்டியாவத்தை சந்தியூடாக அந்தோனியார் தேவாலயத்திற்கு பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதல், அத்துடன் க்ரிஸ்ட் பெரேரா மாவத்தையில் இருந்து ஜெம்பட்டா வீதி பொலிஸ் வீதியூடாக அந்தோனியார் தேவாலயத்திற்கு பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதல் ஆகியன மட்டுப்படுத்தப்படவுள்ளன.

எனவே குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!