கொரோனா அச்சம்: கர்ப்பம் தரிப்பதை தவிர்க்குமாறு பெண்களுக்கு பிரேசில் அரசாங்கம் அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மோசமான காலம் கடந்து செல்லும் வரை கர்ப்பம் தரிப்பதை தவிர்க்குமாறு பிரேசில் அரசாங்கம் அந்நாட்டு பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உலக அளவில் உருமாறிய கொரோனா அதிகம் கண்டறியப்பட்டுள்ள நாடு பிரேசில். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல நாடுகள் போராடி வரும் சூழலில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க பிரேசில் போராடி வருகிறது.

உருமாறிய கொரோனாவின் பாதிப்பு அதிதீவிரமாக உள்ளதால் அந்நாட்டில் நாள்தோறும் 3000-க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 368,749 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தான் கொடுமையின் உச்சம். இதனால் அந்நாட்டு சுகாதாரத்துறை பெண்களுக்கு புதிய அறிவுரையை வழங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மோசமான காலம் கடந்து செல்லும் வரை கருவுருவதை தள்ளிப்போடுமாறு பிரேசில் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் இந்த சூழலில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளும் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு பிரசவத்தின் போது மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்கள், தற்போது கருவுற்று சில நாட்களிலேயே உருமாறிய கொரோனா வைரஸால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கருத்தரிப்புக்கு முயற்சிக்கும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த அறிவுரை வழங்கமுடியாது, ஆனால் இளம் தலைமுறையினர் இந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ளுமாறு பிரேசில் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!