மனித உரிமைகள் ஆர்வலரை குறிவைத்த கிம் ஜாங் உன்: அதிர்ச்சி தகவல்!

வட கொரியாவின் மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர், தாம் கிம் ஜாங் உன்னால் குறிவைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால் எந்த மிரட்டலுக்கும் தாம் அஞ்சப்போவது இல்லை எனவும், வட கொரியாவின் முகமூடியை கிழித்து அம்பலப்படுத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆர்வலரான 27 வயது யியோன்மி பார்க் என்பவரே, தாம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னால் குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

துருக்கி தூதரகத்தில் சவுதி பத்திரிகையாளருக்கு நேர்ந்த அதே நிலை தமக்கும் ஏற்படலாம் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தமது தந்தையை கிம் ஜாங் நிர்வாகம் கைது செய்த நிலையில், 2007ம் ஆண்டு வட கொரியாவில் இருந்து கடும் போராட்டத்திற்கு பிறகு தப்பினார் யியோன்மி.

தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் வசித்துவரும் அவர் கிம் ஜாங் குடும்பத்தினரின் அட்டூழியங்கள் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளார்.

வட கொரிய மக்களின் எதிரியாக அடையாளப்படுத்தப்பட்ட தமக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் உறுதி என குறிப்பிட்டுள்ள யியோன்மி, பல முறை தாம் ஊடுரவப்பட்டு, கிம் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக இது தொடர்வதாக குறிப்பிட்டுள்ள அவர், தமது உறவினர்கள் ஒவ்வொருவராக கிம் நிர்வாகம் தண்டித்தது எனவும், இது மூன்று தலைமுறை அல்லது 8 தலைமுறை வரை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது மொத்த குடும்பத்தினரும் சிறையில் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டுள்ளனரா என்பது தமக்கு தெரியாது, ஆனால் அவர்கள் அனைவரும் கொடூரமாக பழிவாங்கப்பட்டதாக யியோன்மி தெரிவித்துள்ளார்.

1993 காலகட்டம் முதலே, வட கொரிய அரசாங்கம் பொதுமக்களுக்கு உணவளிப்பதை நிறுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ள யியோன்மி, இதனால் 1995 முதல் 1998 வரையான காலகட்டத்தில் 3 மில்லியன் வட கொரிய மக்கள் மரணமடைந்துள்ளதாகவும், இது மனிதனால் உருவாக்கப்பட்ட வரலாற்றின் மிக மோசமான பஞ்சங்களில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.

வட கொரியாவில் பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது வாடிக்கை என குறிப்பிட்டுள்ள யியோன்மி, ஆனால் அவை அனைத்தும் சிறார்கள் முன்னிலையில் நடத்தப்படும் எனவும், அவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கும் எனவும் யியோன்மி குறிப்பிட்டுள்ளார்.

வட கொரிய மக்களுக்கே சொந்த நாட்டில் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக சென்று வரும் அனுமதி இல்லை என்றே யியோன்மி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!