பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்போதைய அரசும் தவறி விட்டது!

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எந்தவொரு அரசாங்கத்தினதும் பிரதான பொறுப்பாகும். எனினும் கடந்த அரசாங்கம் அந்த பொறுப்பை நிறைவேற்றத் தவறியுள்ளதோடு , தற்போதைய அரசாங்கமும் இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிரத்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் இணைந்து பயிற்சி பெற்ற பலர் இன்றும் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் ஏதேனுமொரு மத வழிபாட்டு ஸ்தலத்தில் இது போன்றதொரு தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் காணப்படுகிறது.

இந்த சந்தேகத்தை போக்க வேண்டியதும் தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு சோகத்தை தெரிவிப்பதற்காக மாத்திரம் இந்த ஈராண்டு பூர்த்தி அனுஷ்டிக்கப்படவில்லை. மாறாக மீண்டுமொரு இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற வாய்ப்பளித்து விடக் கூடாது என்பதையும் இன்றைய தினத்தில் வலியுறுத்துகின்றோம்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். எனினும் கடந்த அரசாங்கத்தினால் அந்த பொறுப்பு நிறைவேற்றப்படவில்லை. அதே போன்று தற்போதைய அரசாங்கத்தினாலும் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்று பரவலாக குற்றஞ்சுமத்தப்படுகிறது.

எனவே கடந்த அரசாங்கத்தினால் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

அதற்கமைய தீவிரவாதத்தை மாத்திரமின்றி அதற்கு ஏதுவாக அமைகின்ற காரணிகளும் இல்லாமலாக்கப்பட வேண்டும். அன்றைய தினம் தற்கொலை குண்டு தாக்குதல்களை முன்னெடுத்தவர்களுடன் தீரவிரவாத பயிற்சி பெற்ற பலர் இன்றும் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறானவர்கள் தமது கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கத்தோலிக்க ஆலயங்களில் மாத்திரமின்றி வேறு எந்தவொரு மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும் என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் காணப்படுகிறது. அந்த சந்தேகத்தை போக்க வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!