சமஷ்டி ஆட்சி உருவாக வாய்ப்பு!

இலங்கையில் சமஷ்டி ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், இருப்பினும் ஒருபோதும் தனிநாடொன்று உருவாகாது என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

சிலர் ஸ்ரீலங்கா இரண்டாகப் பிளவுபடுவதாகவும் தனிநாடு உருவாகின்றது என்றும் விமர்சனங்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர். இல்லை, 13ஆவது திருத்தமானது நாட்டில் 9 மாகாணங்களாக பிரிக்கப்படுகின்றது. அதில் ஒன்றாகிலும் பிரிக்கப்பட்டால் நாடு சமஸ்டியாகும் என்பதை ஜே.ஆர் ஜயவர்தன கூறியிருந்தார்.

பிரிவடைவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. ஆளுநர் நீக்கப்பட்டால் அதற்கான வாய்ப்பு உள்ளது. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கமையவே ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதனால் மாகாண சபைகளுக்கு நிறைவேற்றதிகாரம் இல்லை. அதனை நாடாளுமன்றத்தின் ஊடாக குறைக்கவும் முடியும்.

மாகாணங்களுக்கு புறம்பான நீதிமன்றங்கள் இல்லை. மாவட்ட நீதிமன்றங்கள் நாட்டின் ஒட்டுமொத்த நீதிமன்றக் கட்டமைப்பிற்குள் தான் இருக்கின்றன. ஆகவே மாகாண சபை முறை வரும்போது அன்று கைகளை உயர்த்தியவர்கள் இன்று நாடு பிரிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதுபோல கொழும்பு போர்ட் சிட்டி திட்டம் சீனக் கொலனியாகாது, தனிநாடாகவும் மாறாது. தற்போது நாட்டில் அமுலில் உள்ள சட்டங்களில் 07 சட்டங்களைத் தவிர 57 சட்டங்கள் அந்தத் திட்டமுள்ள பகுதியில் அமுலாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!