கொரோனா ஊரடங்கு: ஒரே மாதத்தில் 75 லட்சம் வேலை இழப்புகள்!

இரண்டாவது கரோனா அலையினால் இந்தியா கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 10 நாட்களாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட, பலி எண்ணிக்கையோ தினமும் 3 ஆயிரத்தை கடக்கிறது. இதனைத் தொடர்ந்து கரோனா பரவலுக்கு தகுந்தவாறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கையும் விதித்து கொள்ளுங்கள் என்று மத்திய அரசு மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு நிலவுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் சுமார் 75 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் இயக்குனர் மகேஷ் கூறும்போது, ‘ ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் வேலை இழப்பு சதவீதம் 7.97 -ஐ தொட்டுள்ளது. இதுவே நகர்ப்புறங்களில் 9.78 சதவீதமாகவும், கிராமப்புற வேலையின்மை 7.13 சதவீதமாகவும் உள்ளது.

மார்ச் மாதத்தில் நாட்டின் வேலையின்மை சதவீதம் 6.50 ஆக இருந்தது. இந்த நிலையில் ஒரு மாதத்தில் 7.97 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று அதிகரிப்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் வேலையிழப்பு அதிகரிப்பதை நான் பார்க்கிறேன். வேலை இழப்பு ஒருபக்கம் அதிகரித்து வரும் சூழலில் தொழிலாளர் பங்களிப்பு வீதமும் குறைந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது’ என்று தெரிவித்துள்ளார்.

முதல் கரோனா அலை காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கால் பங்கு குறைந்தது. இந்த நிலையில் இரண்டாம் கரோனா அலையிலும் வேலை இழப்புகள் அதிகரித்து வருவது வருத்தத்தை அளிப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!