முல்லைத்தீவு நில அபகரிப்பு நிறுத்தப்படும் – சமல் வாக்குறுதி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையால் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நில சுவீகரிப்பு நிறுத்தப்படும் என்று துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்r, தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் மேற்படி விடயம் பேசப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்கள், செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு கருத்தறிந்து இறுதி முடிவு எட்டப்படும் என்று தங்களால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த உத்தரவாதம் மீறப்பட்டு மகாவலி அதிகார சபை செயற்பட முனைகின்றது என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதைச் செவிமடுத்த துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, குறித்தபகுதிக்கு எம்மால் நேரில் பயணித்து அது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் வரையில் மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டை நிறுத்துமாறு செயலாளர் ஊடாகக் கடிதம் அனுப்பப்படும் என்று உத்தரவாதம் வழங்கினார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!