குருந்தூர்மலையில் பிக்குகள் பிரித் ஓதி கூட்டமாக வழிபாடு!

?????????????????????????????
முல்லைத்தீவு, தண்ணீர்முறிப்பு, குந்தூர் மலையில் நேற்றிரவு இராணுவத்தினரின் பிரசன்னத்துடன், பிக்குகள் பிரித் ஓதி வழிபாடுகளை ஆரம்பித்துள்ளனர். இந்த வழிபாடுகளைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இன்று புதிய விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் புராதன பௌத்த விகாரை சிதைவுகள் உள்ளன என்று தெரிவித்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த வழிபாட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால வந்துள்ளார். அந்தப் பகுதிக்கு ஊடகவியலாளர்கள், மக்கள் அனுமதிக்கப்படாமையால் சரியான விவரங்களைப் பெறமுடியவில்லை.

தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து ஒன்றுகூடி வழிபாடுகள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலைமையில் மாவட்ட நிர்வாகத்துக்கோ, சுகாதாரத் தரப்பினருக்கோ தெரியப்படுத்தாது பெரும் எண்ணிக்கையானோருடன் இந்த வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமைப் படை அதிகாரி மற்றும் சுமார் 30 பௌத்த பிக்குகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் இணைந்து தோரணங்கள் கட்டி, பந்தல்கள் அமைத்து இந்த வழிபாடுகள் நடத்தப்பட்டன என்று தெரியவருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!