நாட்டின் பல்வேறு இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சீரற்ற வானில காரணமாக, களு கங்கையை அண்மித்த சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரத்தினபுரி, குருவிட்ட, கிரியெல்ல, அயகம மற்றும் எலபாத பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில், இன்று அதிகாலை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையிலேயே, இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த பகுதியில் வசிக்கும் மக்களும், வாகன சாரதிகளும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, களனி கங்கை, ஜன் கங்கை, நில்வா கங்கை, மஹாவெலி கங்கை மற்றும் அத்தனகல்லா ஓயாவை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்களும் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன், அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், மக்களுக்கு நிவாரணங்களை வழங்க, பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் தயார் நிலையில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இந்த நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும்,காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலிய ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்க, வட மத்திய, வட மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக் கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!