நடந்தே செல்ல முடியும் – வாகனங்களுக்கு அனுமதி இல்லை!

பயணக்கட்டுபாடுகள், இன்று அதிகாலை நீக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருள் கொள்வனவுக்காக ஒருவர் மாத்திரமே வீடுகளிலிருந்து வெளியே செல்லலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன, இவ்வாறு வெளியே செல்பவர்கள், வாகனங்களில் செல்ல அனுமதிப்பட மாட்டார்கள் என்பதுடன், இவர்களின் வாகனங்களை நகரங்களில் தரித்து வைக்க அனுமதியும் வழங்கப்படாதென்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமது வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் மாத்திரமே பொருள்களையோ மருத்துவப் பொருள்களையோ கொள்வனவு செய்ய முடியும். இவ்வாறு செல்பவர்கள், அந்த பிரதேசத்தில் நிரந்தர அல்லது தற்காலிக வசிப்பிடதாரிகளா என உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன், இதன்போது அடையாள அட்டையின் கடைசி இலக்கம் நடைமுறை கருத்திற்கொள்ளப்படாது” என்றார்.

எனினும், தமது வசிப்பிடங்களை உறுதிப்படுத்துவதற்காக, அடையாள அட்டையைக் கொண்டு செல்வது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், வைத்தியர்களுக்கே உரிய போலி இலட்சினைகளைப் பொருத்திய வாகனங்கள் சட்டவிரோதமாகப் பயணிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இது குறித்து தீவிரமாகப் பரிசோதனை செய்ய, விசேட பொலிஸ் குழுக்கள் , அதிகளவான சிவில் மற்றும் அதிகளவான பொலிஸார் வீதித்தடை கண்காணிப்புகளில் ஈடுபடவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

எனவே, விசேடமாக வைத்திய இலட்சினையுடன் பயணிக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படும் என்பதுடன், இதற்கு வைத்தியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், பயணக்கட்டுபாடு தளர்த்தப்படும் நாட்களில், மரக்கறி, இறைச்சி, மீன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் மாத்திரமே திறந்திருக்குமே அன்றி, குறித்த காலப்பகுதிக்குள் ஆடை விற்பனை மற்றும் ஆடம்பர பொருள் விற்பனை நிலையங்கள் திறக்கப்படாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!