அமலில் இருக்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மேலும் நீட்டிப்பு!

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்ததை தொடர்ந்து இந்த மாதத்தில் (மே) கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த மாதம் 29-ந்தேதி மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. அதன்படி ஆக்சிஜன் படுக்கைகள், அவசர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், ஆம்புலன்சுகள், தற்காலிக ஆஸ்பத்திரிகள், ஆக்சிஜன், தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் போன்றவை போதுமான அளவு இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேற்படி வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. எனினும் எந்த பகுதியிலும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இந்த உத்தரவில் குறிப்பிடவில்லை.

இந்த உத்தரவை வெளியிட்டு உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:-

தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட செயல்பாடுகளால் வடகிழக்கு மற்றும் தெற்கு மண்டலங்களை தவிர பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய மற்றும் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையில் சற்றே சரிவை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த சரிவு இருந்தபோதும் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போதும் அதிகமாகவே இருக்கிறது. எனவே அதிக எண்ணிக்கையில் தொற்று பரவும் மாவட்டங்களில் உள்ளூர் மட்டத்தில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக தொடர வேண்டும்.

அதேநேரம் தளர்வு நடவடிக்கைகள் தேவைப்பட்டால் உள்ளூர் நிலவரம், தேவைகள் மற்றும் வளங்களை ஆராய்ந்து தகுந்த நேரத்தில் படிப்படியாக தளர்வுகள் வழங்குவது குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்கலாம்.

இவ்வாறு உள்துறை செயலாளரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!