தற்போதைய நிலைக்கு அரசாங்கமே பொறுப்பு!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் வீரியத்திற்கும், அதிகரிக்கும் மரணங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென சிங்கள ராவய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலை ஆரம்பித்தவுடனேயே நாட்டை முடக்கியிருக்க வேண்டுமெனவும், தற்போது நாட்டை முடக்குவதில் எவ்வித பிரயோசனமும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது அலை உருவானபோது நாட்டை முடக்குமாறு நாம் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. இதன் காரணமாக மூன்றாவது அலை வேகமாக பரவியது. இன்று மரணங்ளின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. அரசாங்கமே இதற்கு பொறுப்பு.

நான்கு ஐந்து நாட்கள் நாட்டை மூடுகின்றார்கள். பின்னர் திறக்கின்றார்கள். இதன் பின்னர் கொரோன தொற்று இல்லாதவர்களும் நோய்வாய்படும் அபாயம் காணப்படுகின்றது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இதற்குக் காரணம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டது. எனினும் அது எதுவும் இடம்பெறவில்லை. நாட்டை வெறுமனே முடக்குவதால் எதுவும் நடைபெறப்போவது இல்லை. நான்கு நாட்கள் நாட்டை முடக்கியதால் ஆறாயிரம் கோடி நட்டம் ஏற்படுமென அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

கஸ்பேவ பிரதேசத்தில் இன்றும் தொற்று அதிகரித்துள்ளது. இதற்கு காரணமான அரசியல்வாதிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மொரட்டுவை மாநகர சபைத் தலைவரின் நடத்தைத் தொடர்பிலும் சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் தலையீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!