மூழ்கும் அபாயம் இன்னமும் இல்லை!

கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்த, “எம்.வீ. எக்ஸ் பிரஸ் பேர்ல்” கப்பல் கடல் மற்றும் கடற்சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு, பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தொடர்பில், எதிர்வரும் நாள்களில் முழுமையான விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நகர அபிவிருத்தி, கடலோரப் பாதுகாப்பு கழிவுகள் அகற்றல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, குறித்த கப்பல் விபத்தை சந்திக்கும் முன்னர், இரண்டு நாடுகளின் துறைமுகங்களில் நுழைவதற்கு அனுமதி கோரியுள்ள தகவல்களை நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கு முன்னர், அக்கப்பலில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக எவ்வித முன்னறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், கடலுக்குள் மூழ்கும் அபாயம் இந்த நிமிடம் வரை, ஏற்படவில்லை என்றும் இக்கப்பல் தீப்பற்றியதால் கடல் சுற்றாடலுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.

அந்தக் கப்பல், இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிடுவதற்கு முன்னர் துறைமுக அதிகார சபையின் அனுமதியை பெறவில்லை. அத்துடன், கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்றில் இரசாயன பதார்த்தம் கசிவு ஏற்பட்டுள்ளது என்பதையும் கப்பலின் நிர்வாகத் தரப்பினர் முன்கூட்டியே அறிவிக்கவில்லை.

அபாயகரமான நிலையில் நாட்டின் கடற்பரப்புக்குள் இக்கப்பல் நங்கூரமிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என்றார். இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக இலங்கையின் கடற்பரப்புக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள பாதிப்பை தற்போது மதிப்பீடு செய்ய முடியாது. கப்பலில் இருந்த கொள்கலன்களும் தீக்கிரையாகியுள்ளன. கப்பல் தரை தட்டியவுடன் முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படும் என்றார்.

கப்பலில் சிறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது என கப்பலின் கப்டன் கடந்த 20ஆம் திகதி காலை 10 மணியளவில் துறைமுக அதிகார சபைக்கு ஈ- மெயில் ஊடாக அறிவித்துள்ளார்.

இருப்பினும், உதவி கோரவில்லை. அன்றைய தினம் பகல் 12 மணியளவில் கப்பலின் தீப் பரவலைக் கட்டுப்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2 மணியளவில் மீண்டும் தீப் பரவல் அதிகரித்துள்ளது. இக்கப்பலில் சட்டவிரோதமான பொருள்கள் எதுவும் கொண்டு செல்லப்படவில்லை.

சீரற்ற வானிலையின் காரணமாக தீப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத அசாதாரண நிலை நேற்று வரை காணப்பட்டது. தற்போது தீப்பரவல் ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கப்பலின் இருந்து பெரும்பாலான கொள்கலன்கள் தீக்கிரையாகியுள்ளன என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!