அரசியல் கைதிகள் விடுதலை- சுமந்திரன், சிறிகாந்தா வரவேற்பு!

தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கட்சி ஆகியன வரவேற்றுள்ளன. சிறையில் உள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் நீக்க வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட 35 அரசியல் கைதிகளில் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

35 பேரில் எஞ்சிய 19 கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு அந்த கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கு விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள 38 கைதிகளை சட்டமா அதிபர் ஊடாகவும் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 116 பேரை பிணையில் அல்லது பொது மன்னிப்பில் விடுவிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே எஞ்சியுள்ள 173 கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கப்படும் என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!