அசேல சம்பத் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை அறிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் பொது முகாமையாளரினால் குற்றப்புலனாய்வு பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் யு டியுப் ஆகியனவற்றில் எஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசி தொடர்பில் போலியான தகவல்களை பதிவேற்றியுள்ளார் என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமையவே குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்றைய தினம் பிலியந்தலை பகுதியில் வைத்து அசேல சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

எனினும் அசேல சம்பத் என்பவர் கடத்தப்பட்டுள்ளதாக அவரின் புதல்வி தெரிவிக்கின்றார்.

எனது தந்தையாரே அசேல சம்பத். திடீரென 20 இற்கும் மேற்பட்டவர்கள் வீட்டிற்குள் பிரவேசித்தனர். வருகை தந்தவர்கள் எந்தவித அறிவித்தல்களையும் விடுக்கவில்லை. தந்தையை கடத்திச்சென்றுவிட்டனர். சி ஐ டி யினர் என்றுதான் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் எவ்வித விபரங்களும் இல்லை. வருகை தந்தவர்கள் சீருடையிலும் இல்லை. பிடியாணைக்கான உத்தரவும் அவர்களிடம் காணப்படவில்லை. தந்தையை கடத்திதான் சென்றுள்ளனர். ஆகையினால் நான் தந்தையின் நண்பர்களிடம் ஒன்றை கேட்டுக்கொள்கின்றேன். தந்தையை கண்டறிந்து கூறுங்கள். என் ஈ பூச்சியம் 38 என்ற வாகனத்திலேயே தந்தையை அழைத்துச் சென்றனர்.

அத்துடன் அசேல சம்பத்திற்கான அனைத்து சட்ட உதவிகளும் இலவசமாக வழங்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!