டெல்டா கொரோனா வைரஸ் நாட்டில் வேகமாக பரவும் அபாயம்

டெல்டா கொரோனா வைரஸ் நாட்டில் வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்

எனவே கொரோனா பரவலை தடுப்பதற்கு தேவையான சுகாதார விதிமுறைகளை பொதுமக்கள் உரிய முறையில் பின்பற்றி செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்

இதேவேளை புதியவகை டெல்டா கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு எடுக்காத பட்சத்தில் நிலைமை தீவிரமடையக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்

இதனிடையே நாட்டில் இதுவரை ஐவருக்கு டெல்டா கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 867 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய ஆயிரத்து 767 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 100 பேரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 53 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 ஆயிரத்து 158 பேர் குணமடைந்துள்ள நிலையில் நேற்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 18 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் மேலும் 39 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த மரணங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12 பெண்கள் 27 ஆண்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 ஆயிரத்து 715 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!