யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்தைக் கடந்தது தொற்றாளர் எண்ணிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியுள்ளதாக, யாழ். மாவட்டச் செயலாளர் மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

கொரோனா நிலைமையை அவதானிக்கும் போது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,190ஆக அதிகரித்துள்ளதெனவும் அதேநேரம், கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் 87ஆக உயர்ந்துள்ளதெனவும் கூறினார்.

மேலும், 4,616 குடும்பங்களைச் சேர்ந்த 13,793 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், “சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவும் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/69, ஜே,71 கிராம அலுவலர் பிரிவுகளும், கரவெட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரணவாய் பகுதியும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், யாழ். மாவட்டத்துக்கு கிடைத்துள்ள 50,000 தடுப்பூசிகள், முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், முதல் டோஸ் தடுப்பூசி பெற்ற நிலையங்களுக்கே சென்று, 2ஆவது டோஸுக்கான தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கூறினார்.

நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களிலும் 2ஆவது டோஸ் தடுப்பூசி போடும் பணி, வெள்ளிக்கிழமை (02) வரை இடம்பெறும் என்றும், மகேசன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!