விவசாயிகளிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர்

இரசாயன பசளை தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கி இருக்கும் நிலைமை குறித்து மிகவும் கவலையடைவதாகவும் பசளையை வழங்க முடியாமல் போனது சம்பந்தமாக தான் விவசாயிகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உண்மையில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நாங்கள் கவலையடைகின்றோம். விவசாய மக்கள் வாழும் பிரதேசத்தை சேர்ந்தவன் என்ற வகையில் நான் விவசாயிகளிடம் மன்னிப்பு கோருகிறேன்.

இந்த போகத்தில் சிலருக்கு தமது உற்பத்தியை அறுவடை செய்ய முடியவில்லை. இரசாயன பசளை இறக்குமதியை நிறுத்த ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தில் அடிப்படை நோக்கம் இருந்தது.

பெரும் போகத்தில் இருந்து பயிர்ச் செய்கையை வெற்றிகரமான முன்னெடுக்கலாம் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி இதனை செய்தார்.

சிறுபோகத்திற்கு தேவையான பசளை இருப்பதாக எமது அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் துரதிஷ்டவசமாக அதனை சில பிரதேசங்களுக்கு வழங்க முடியவில்லை.

இது குறித்து மிகவும் கவலையடைகின்றோம். அமைச்சரவையில் மூன்று முறை இது பற்றி பேசினோம். இதுவரை எமக்கு தீர்வை வழங்க முடியாது இருக்கின்றது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!