நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு – கொழும்பு அரசியலில் பரபரப்பு

2015 அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனம் ஒன்று 7.6 மில்லியன் டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி பொய்யானது என்று ராஜபக்ச தரப்பு மறுத்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இதுகுறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் உத்தரவைக் கோரவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியூயோர்க் ரைம்ஸ் செய்தியை அடிப்படையாக வைத்து, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்தே, இந்த விவகாரம் குறித்து எந்த காவல்துறைப் பிரிவு விசாரணை நடத்தும் என்பது குறித்து, காவல்துறை மா அதிபரின் உத்தரவைக் கோரவுள்ளதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் தம்மிக பிரியந்த தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதுகுறித்து கொழும்பு ஆங்கில வாரஇதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, “நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒரு அரசியல் சூழ்ச்சி, எல்லா குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன்.

நான் எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக சட்டவாளர்களுடன் ஆலோசித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!