மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி

மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட இராணுவ வைத்தியசாலைகள் மற்றும் முகாம்களில் இன்று முதல் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாராஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலை, வேரஹெர இராணுவ வைத்தியசாலை தலைமையகம், பனாகொடை இராணுவ முகாம், குவன்புர விமானப்படை முகாம், மற்றும் வெலிசர கடற்படை முகாம் ஆகிய பகுதிகளில் குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், மேல் மாகாணத்தை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ முகாம்களில் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, மாத்தறை நில்வளா முகாம், அநுராதபுரம் விக்டரி வைத்தியசாலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைகளில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியினை தெரிவு செய்யப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவ வைத்தியசாலைகளில் பெற்று கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!