இன்று முதல் தடுப்பூசி போடும் பணியில் முப்படைகள்!

முப்படைகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் கோவிட் வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று முதல் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு சென்று சினோஃபார்ம் தடுப்பூசி பெறலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, நாரஹேன்பிட்ட இராணுவ மருத்துவமனை, வெரஹெரா மற்றும் பனாகொட இராணுவ மருத்துவமனைகளில் பெறலாம்.

மேலும், விமானப்படை மருத்துவமனை, கொழும்பு, இரத்மலான, கட்டுநாயக்க மற்றும் எக்கல விமானப்படை தளங்கள் மற்றும் வெலிசற கடற்படை கோவிட் ஒழிப்பு மையத்தில் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

மேலும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, அனுராதபுரம், காலி, மாத்தறை மற்றும் தியதலாவ ஆகிய இடங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தடுப்பூசி போடப்படும்.

இந்த தடுப்பூசி இராணுவ மருத்துவமனை, தியதலாவ இராணுவ மருத்துவமனை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண இராணுவ மருத்துவமனைகள் ஆகியவற்றில் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!