ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையில் இருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையில் இருந்து மற்றுமொரு உயர்நீதிமன்ற நீதியரசர் விலகியுள்ளார்.

குறித்த அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது தனிப்பட்ட காரணங்களினால் தான் குறித்த விசாரணை நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதியரசர் Mahinda Samayawardhena தெரிவித்தார்.

முன்னதாக, உயர்நீதிமன்ற நீதியரசர்களான AHMD நவாஸ், யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரும் குறித்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளில் இருந்து விலகியிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளில் இருந்து விலகும் நான்காவது உயர்நீதிமன்ற நீதியரசராக Mahinda Samayawardhena பதிவாகியுள்ளார்.

இதனை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு எதிர்வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தம்மை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி, குறித்த அடிப்படை உரிமை மனுவை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!