தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறல் – 266 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில், கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 266 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், 48 ஆயிரத்து 808 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் உற்பிரவேசிக்கும் 13 நுழைவாயில்களில் 7 ஆயிரத்து 320 பேர் மற்றும் அவர்கள் பயணித்த 3 ஆயிரத்து 867 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணங்களுக்கிடையிலான கட்டுப்பாடுகளை மீறி மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு முயற்சித்த 205 பேர் மற்றும் அவர்கள் பயணிதத் 94 வாகனங்கள் மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!