துபாயில் பற்றி எரிந்த சரக்கு கப்பல்: ஊழியர்களின் நிலை என்ன?

துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் உலக அளவில் கடல்சார் வர்த்தகத்தில் முக்கிய மையமாக இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் இந்த துறைமுகத்தின் வழியாகவே பெரும்பாலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில், நேற்று அதிகாலையில் அந்த துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர்களில் இருந்து தீப்பிடித்தது.

3 கன்டெய்னர்களில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறிது நேரத்தில் தீ மளமளவென மற்ற கன்டெய்னர்களுக்கும் பரவியது.மொத்தம் 130 கன்டெய்னர்களுடன் இருந்த அந்த கப்பலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 14 ஊழியர்களும் பணியில் இருந்தனர்.

14 ஊழியர்கள் காயம்

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கப்பலில் இருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் கட்டுக்கடங்காமல் குபுகுபுவென்று அந்த கப்பல் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் திகைத்த கப்பல் மற்றும் துறைமுக அதிகாரிகள் உடனடியாக துபாய் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சம்பவ இடத்திற்கு துபாய் போலீஸ் தலைவர் அப்துல்லா கலீபா அல் மர்ரி விரைந்து சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினார். கப்பலில் தத்தளித்துக்கொண்டு இருந்த 14 ஊழியர்கள் உள்ளிட்ட பலர் சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

வெடி வெடித்தது போல்…

இந்த தீவிபத்து காரணமாக கடலோர பகுதிகளில் வசித்து வந்தவர்களுக்கு வெடி வெடித்தது போல சத்தம் கேட்டது. கன்டெய்னர்களில் இருந்த தீப்பற்றும் பொருட்கள் வெடித்ததன் காரணமாக இந்த சத்தம் மற்றும் ஆரஞ்சு நிற தீ ஜுவாலை ஏற்பட்டது என அங்கு வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த துபாய் துணை ஆட்சியாளர் மேதகு ஷேக் மக்தூம் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு துறைமுக அதிகாரிகள் தீவிபத்து நடைபெற்றது குறித்து விளக்கம் அளித்தனர்.பிறகு அங்கு நடைபெற வேண்டிய சீரமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

பட்டத்து இளவரசர் பாராட்டு

இந்த தீவிபத்து குறித்து துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

துபாய் ஜெபல் அலி துறைமுகத்தில் கன்டெய்னரில் ஏற்பட்ட தீவிபத்தில் மிகவும் திறமையாக செயல்பட்டு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் சூழ்நிலையை சிறப்பாக கையாண்ட எனது குழுவினரை பாராட்டுகிறேன். அவர்களது இந்த துரித நடவடிக்கை என்னை பெருமையடைய செய்துள்ளது.

தொடர்ந்து துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமின் வழிகாட்டுதல்கள் அவசரநிலை மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை துபாய் அரசு திறமையாக சமாளிக்கிறது என்பதை நிரூபித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த தீவிபத்து குறித்து விரிவான விசாரணையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு குழுவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!