மத்தலவுக்கு மீண்டும் விமானங்கள் வரும் – என்கிறார் சிறிலங்கா பிரதமர்

மத்தல விமான நிலையத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் இருந்து மீண்டும் அனைத்துலக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட மத்தல அனைத்துலக விமான நிலையத்துக்கு சேவையை நடத்தி வந்த, ஒரே ஒரு விமான சேவையான பிளை டுபாய் நிறுவனமும், அண்மையில் தனது சேவையை நிறுத்தியது.

இதையடுத்து, மத்தல விமான நிலையத்துக்கு தற்போது பயணிகள் விமான சேவைகள் எதுவும் இடம்பெறுவதில்லை.

இதுதொடர்பாக நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“முன்னர் மத்தல விமான நிலையத்தில் பறவைகள் மாத்திரம் தரையிறங்கின.

இப்போது, மத்தல விமான நிலையத்தில் இருந்து வணிக விமானங்களை இயக்குவது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் இருந்து, அனைத்துலக விமானங்கள் மத்தலவில் இருந்து மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!