அமைச்சர் பதவி பறிபோனாலும் கவலையில்லை!

எனது அமைச்சுப் பதவியை மீள பெற்றுக்கொள்ள அல்லது மாற்றியமைக்க ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் இருக்கி்ன்றது. அதுதொடர்பில் நான் கவலைப்படுவதும் இல்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

“ பிரதமரின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சுப் பதவியையும் மீள பெறவும் முடியும் அதனை மாற்றியமைக்கவும் முடியும். அந்தவகையில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பதவியை என்னிடமிருந்து பெற்று வேறு யாருக்காவது வழங்குவதற்கு தீர்மானித்தால் அதற்கு நான் தயார்.

ஏனெனில் நான் அமைச்சுப்பதவியுடன் அரசாங்கத்துக்கு வரவில்லை. அதனால் எப்போது வேண்டுமானாலும் அதனை வழங்கிவிட்டுத்தான் செல்லவேண்டும். நான் செய்த நன்மைகளைத் தவிர எதனை எடுத்துக் கொண்டு செல்ல முடியாது.

மேலும் எரிபொருட்களின் விலை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. நான் அமைச்சரவைக்கு தெரிவித்ததால்தான் விலை அதிகரிப்பு இடம்பெற்றதாக அரசாங்கத்தில் இருந்து யாரும் தெரிவித்ததாக எனக்கு தெரியாது.

அவ்வாறு யாரும் தெரிவித்திருந்தால், அதுதொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில் அரசாங்கத்தை நடத்துவது நான் அல்ல. மாறாக ஜனாதிபதியும் அமைச்சரவையுமாகும் என்றே இதுவரை நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி எனக்கு எதிராக கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க நான் தயாராகவே இருக்கின்றேன். பசில் ராஜாபக்ஷ் எனக்கு ஆதரவாக வாக்களிப்பாரா என்ற நம்பிக்கையில்லாத எதிர்கால விடயங்கள் தொடர்பில் எனக்கு தெரியாது.

என்றாலும் அதில் வெற்றி பெறுமா இல்லையா என்பதை 20ஆம் திகதி மாலை இடம்பெறும் வாக்களிப்பில் தெரியவரும். அதுவரை சற்று பொறுமையாக இருங்கள் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!