மாகாண சபைகளுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் – கூட்டமைப்பு

பதவிக்காலம் முடிந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய தேர்தல் சீர்திருத்தங்களை சிறிலங்கா அசாங்கம் செயற்படுத்த வேண்டும் அல்லது தாமதமின்றி பழைய தேர்தல் முறைக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவுக்கு வந்தது.

எனினும், சிறிலங்கா அரசாங்கம் தேர்தல் முறையில் மாற்றம் செய்வதற்காக மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தது.

இந்த தேர்தல் முறை மறுசீரமைப்பு முடங்கிப் போயுள்ளதால், இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,

இதுதொடர்பாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன்,

“மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றாலும், இன்னமும் அது தொடர்பான சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.

உடனடியாகத் தேர்தலை நடத்துவது தான், இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு உள்ள ஒரு வழி.

அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் இது நடக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்குள் புதிய சீர்திருத்தங்களை சட்டமாக்கத் தவறினால், சிறிலங்கா அரசாங்கம்,இந்தப் பிரச்சினைக்குக் காரணமான திருத்தங்களை கைவிட வேண்டும்.

பின்னர் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க முடியும். நாங்களும் சீர்திருத்தங்களை விரும்புகிறோம். ஆனால், அதனைப் பயன்படுத்தி தேர்தல்களை தாமதிக்கக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு “வடக்கு மாகாண சபை இன்னமும் கலைக்கப்படவில்லை.” என்று பதிலளித்துள்ளார் சுமந்திரன்.

தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை,மீண்டும் கூட்டமைப்பு வேட்பாளராக நிறுத்துமா என்று அவரிடம் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள சுமந்திரன், அது கடந்த முறை தோல்வியடைந்த திட்டம் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!