ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்

சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் ஜப்பான் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக இந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே தெரிவித்தார்.

இப்பிராந்தியத்தில் ஜப்பான் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்குடனேயே கடந்த ஜனவரி மாதம் இந்நாட்டுப் பிரதமர் அபே பாகிஸ்தான், சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டதுடன் கடந்த மார்ச் மாதம் ரோக்கியோவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய பேச்சுக்களையும் நடாத்தியிருந்தார்.

இப்பேச்சுக்களின் போது பொருளாதாரம், கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒழுங்கு தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையில் மேற்கொள்ளப்படும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய-பசுபிக் மூலோபாயத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக சிறிலங்காவின் சுகாதார நலன் பேண் சேவைகளுக்காக 100.4 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்று ஜப்பான் மற்றும் சிறிலங்காவின் அரச தலைவர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டது.

ஜப்பான், சிறிலங்காவின் மிகப் பெரிய இருதரப்பு கடன்வழங்குநர்களுள் ஒன்றாகக் காணப்படுவதுடன் இதன் பிரதான அபிவிருத்திப் பங்காளியாகவும் உள்ளது. இவ்விரு நாடுகளும் தமக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை 1952ல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருந்தன.

ஆனால் சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரே ஜப்பானுடனான சிறிலங்காவின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்தது. 2016ல் சிறிலங்கா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகள் 971.6 மில்லியன் டொலரை எட்டியிருந்தது.

இலங்கைத் தீவின் மூலோபாய அமைவிடத்தை நோக்கும் போது, சிறிலங்காவானது சீனாவினதும் வேறு நாடுகளினதும் ஆளுகைக்கு உட்பட்டுள்ளதுடன் இந்த நாடுகள் இந்திய மாக்கடலில் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் சிறிலங்காவைப் பயன்படுத்துகின்றன.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் சிறிலங்காவைத் தமது பெறுமதிமிக்க கூட்டணி நாடாகவும் தமது இராஜதந்திர நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு நாடாகவும் நோக்குகின்றன.

சிறிலங்காவை ஜப்பான் எவ்வாறு தனது பூகோள அரசியல் பங்காளியாகக் கொண்டுள்ளது என்பது தொடர்பாகவும் ஜப்பானிய-சிறிலங்கா இராஜதந்திரமானது எதிர்காலத்தில் எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பாகவும் இப்பத்தி மூலம் ஆராயப்படுகிறது.

சிறிலங்கா மீதான நலன்:

பேர்சியன் வளைகுடாவை மலாக்கா நீரிணையுடன் இணைக்கும் ஆரையின் மையத்தில் சிறிலங்கா அமைந்துள்ளதால் இதன் அமைவிடமானது இந்திய மாக்கடலில் மிகமுக்கிய பங்கை வகிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும், சிறிலங்காவிற்குச் சொந்தமான கடலிலிருந்து 10 கடல்மைல் தூரத்திலுள்ள கடல் வழியாக 60,000 இற்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கின்றன.

உலகின் எண்ணெய் வழங்கலின் மூன்றில் ஒரு பங்குக் கப்பல்களும் அரைவாசி சரக்குக் கப்பல்களும் சிறிலங்காவை அண்மித்த இந்திய மாக்கடல் கடல் பாதையின் ஊடாகவே பயணிக்கின்றன. ஜப்பான் தனக்குத் தேவையான 90 வீத பெற்றோலிய வளத்தை இறக்குமதி செய்கின்றது.

இந்நிலையில் சீனாவின் செல்வாக்கானது இந்திய மாக்கடலில் அதிகரித்து வரும் நிலையில் இது ஜப்பானின் பெற்றோலிய வள இறக்குமதிக்கு அச்சுறுத்தலாக அமையும் என யப்பான் கருதுகிறது.

இவ்வாறு எழுச்சி பெற்று வரும் சீனாவின் செல்வாக்கு மற்றும் இதன் இராணுவ நவீனமயமாக்கல், தென்சீனக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் செயற்பாடுகள் போன்றன ஆசியாவின் பாதுகாப்புச் சூழல் சீர்கெடுக்கின்றன.

பனிப்போருக்குப் பின்னான காலப்பகுதியில், ஜப்பானானது அமெரிக்காவுடன் நல்லுறவுகளை விரிவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இருப்பினும், ஜப்பான் பன்முக உறவுகளைக் கட்டியெழுப்புவதிலும் கவனம் செலுத்துகிறது.

குறிப்பாக நுணுக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவதிலும் பொதுவான பிராந்தியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் ஜப்பான் கவனம் செலுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக, பிராந்திய ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்காக சிறிய மற்றும் நடுத்தர உடன்படிக்கைகளையும் தனது அயல்நாடுகளுடன் ஜப்பான் மேற்கொள்கிறது.

இதன் முதற்கட்டமாக அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் முத்தரப்பு கலந்துரையாடல் ஒன்று ஜூன் 2015ல் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறான ஜப்பானின் நகர்வுகளுக்கு சிறிலங்காவானது மூலோபாய மற்றும் சாதகமான பாதுகாப்பு பங்காளி நாடாக பயன்படுத்தப்படுகிறது. இது கூட்டணி நாடுகளுக்கு இடையில் ஆழமான புரிந்துணர்வை மேலும் அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு:

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் ஜப்பானின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் நிலையில், ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு படைகள் அமெரிக்கா மற்றும் இந்திய கடற்படைகளின் மலபார் கடற்பயிற்சிகளுடன் இணைந்து கொண்டதுடன் ஜப்பான் 2015ல் மலபார் பயிற்சி நடவடிக்கைகளின் நிரந்தர உறுப்பு நாடாகவும் மாறியது.

சிறிலங்கா கடற்படையானது மலபார் கூட்டு கடற்பயிற்சியின் போது ஒரு பார்வையாளராகக் கலந்து கொள்ளலாம் என 2015ல் சின்சோ அபே யோசனை தெரிவித்திருந்தார். மலபார் கடற்பயிற்சி முடிவடைந்த பின்னர் ஜூலை 20, 2017ல் இரண்டு ஜப்பானியக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்தமையானது சிறிலங்கா தொடர்பான அபேயின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது.

ஏப்ரல் 2017ல் ஜப்பான்-சிறிலங்கா உச்சிமாநாடு இடம்பெற்ற போது, ஜப்பான் மற்றும் இந்தியாவின் கரையோரப் பாதுகாப்புப் படைகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கூட்டுப் பயிற்சி நடவடிக்கையின் போது சிறிலங்கா பார்வையாளராகக் கலந்து கொள்ள வேண்டும் எனவும் இதற்கான ஒத்துழைப்பை சிறிலங்கா நல்க வேண்டும் எனவும் ஜப்பானியப் பிரதமர் அபே மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகியன ஜப்பானின் கடற்படைக் கூட்டுப் பயிற்சி ஜனவரி 2018ல் இடம்பெற்ற போது அதில் பார்வையார்களாகக் கலந்து கொண்டமையானது ஜப்பானின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியது.

தொழினுட்பத் திட்டங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதன் ஊடாக கடல் சார் பாதுகாப்பைப் பலப்படுத்துவதை ஜப்பான் நோக்காகக் கொண்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, சிறிலங்கா அரசாங்கத்திற்கும் யப்பான் அனைத்துலக ஒத்துழைப்பு அமைப்பிற்கும் இடையில் ஜூன் 30, 2016ல் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ஜப்பானால் சிறிலங்கா கரையோரப் பாதுகாப்புப் படையினருக்கு ரோந்துப் படகுகள் வழங்கப்பட்டன.

பயன்படுத்தப்பட்ட P-3C கண்காணிப்பு விமானங்களை ஜப்பான், சிறிலங்காவிற்கு வழங்கலாம். இந்த விமானங்கள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, நியுசிலாந்து போன்ற ஜப்பானியக் கூட்டணி நாடுகளால் பயன்படுத்தப்படுவதுடன் இவை தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு அனுசரணை வழங்க முடியும்.

கட்டுமானத்தை விருத்தி செய்தல்:

ஏப்ரல் 2017ல், 9.46 மில்லியனை திருகோணமலைத் துறைமுக அபிவிருத்திக்காக முதலீடு செய்யவுள்ளதாக ஜப்பான் தனது தீர்மானத்தை அறிவித்தது. சீனா மட்டுமல்லாது ஜப்பான், இந்தியா போன்ற பிராந்தியப் போட்டி நாடுகள் சிறிலங்காவின் கொழும்பு மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காண்பிக்கின்றன.

2010ன் பின்னர், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுமாறு சிறிலங்கா இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் செலவு கூடிய சிறிலங்காவின் திட்ட வரைபை இந்தியா ஏற்க மறுத்தது.

இதனால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் முதலீடு செய்யுமாறு சீனாவிடம் சிறிலங்கா கோரிக்கை விடுத்தது. சீனாவும் பல பில்லியன் டொலர்களை இதில் முதலீடு செய்யத் தீர்மானித்தது. கடன் சுமையால் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்த சிறிலங்காவால் சீனாவிடமிருந்து பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாதிருந்தது. இதனால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 ஆண்டுகாலக் குத்தகைக்கு சீனாவிடம் சிறிலங்கா கையளித்தது.

இத்துறைமுகத்தை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதானது, இதனை சீனா தனது இராணுவத் தளத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்துமோ என்கின்ற அச்சம் எழுந்துள்ளது.

‘சிறிலங்காவில் இவ்வாறான இராணுவத் தளத்தை அமைப்பதற்கான அனுமதி ஒருபோதும் வழங்கப்படமாட்டாது’ என கொழும்பு உறுதியளித்த போதிலும் சீனா தொடர்பான அச்சம் தொடர்ந்தும் நிலவுகிறது.

சவால்கள்:

சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தின் போது சிறிலங்காவை சீனா தனது அதிகாரத்திற்குள் கொண்டுவர முயற்சித்தது. எனினும் சிறிலங்கா தனது நாட்டின் மீது மேலும் வெளிநாட்டு முதலீடுகள் தேவை எனக்கருதி ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடனான தனது உறவை ஆழமாக்கியது.

ஜனநாயகம், சட்ட ஆட்சி, செழுமைப் பகிர்வு போன்றவற்றின் அடிப்படையில் பெப்ரவரி 2016ல் சிறிலங்கா மற்றும் அமெரிக்கா ஆகியன தமது முதலாவது பங்காளி கலந்துரையாடலை மேற்கொண்டன. இவ்விழுமியங்கள் சீனாவின் செல்வாக்கை முறியடிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா கூட்டணி அமைப்பிற்கும் பேருதவியாக அமைந்துள்ளன.

ஜப்பான் மற்றும் சிறிலங்கா ஆகியன தற்போது ஆழமான நட்புறவைப் பேணிவருகின்றன. இதன்மூலும் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் யப்பான் நிரந்தரமான பங்களிப்பைக் கட்டியெழுப்புவதற்கும் உதவுகிறது.

எனினும் விழுமியங்களை அல்லது நலன்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் இந்திய மாக்கடல் பிராந்தியங்களில் பல கூட்டணிகள் உருவாவதால் இதற்குள் சிறிலங்கா அகப்படும் நிலையும் உருவாகலாம்.

அடுத்த ஆண்டு சிறிலங்காவிலும் இந்தியாவிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், சீனா-இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான விரிசல்கள் மேலும் ஆழமாக்கப்படலாம்.

இறுதியாக, ஜப்பானிய தற்பாதுகாப்புப் படைகளை வழமையான இராணுவமாக மாற்றுவதற்கான அபேயின் முயற்சிகள் பிராந்தியத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதற்கும் காரணமாக இருக்கலாம்.

இவ்வாறான முன்னேற்றங்கள் எதிர்கால ஜப்பானிய-சிறிலங்கா உறவைக் கட்டியெழுப்புவதற்கு உதவினாலும் கூட, தற்போதுஜப்பான் மற்றும் சிறிலங்காவிற்கு இடையிலான இடைக்கால இருதரப்பு உறவுநிலையானது இந்திய-பசுபிக்கின் எதிர்காலத்தை பிளவுபடுத்துவதற்கும் காரணமாக இருக்கும்.

ஆங்கிலத்தில் – Anne-Léonore Dardenne*
வழிமூலம் – IAPS Dialogue
மொழியாக்கம் – நித்தியபாரதி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!