ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் எங்கே?

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய மூன்றாவது அமர்வில் சாட்சியமளித்த சந்தர்ப்பத்தில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த விடயம் குறித்த கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய மூன்றாவது விசாரணை இந்த வார இறுதியில் கொழும்பில் இடம்பெற்றது.

மனித உரிமை மீறல் ஆணைக்குழுவின் தலைவரும், உயர்நீதிமன்ற நீதியரசருமான திலீப் நவாஸ் தலைமையில் இந்த அமர்வு நடைபெற்றது.

இதன்போது சாட்சியமளித்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, யுத்தம் முடிவடைந்த பின்னர் பரணவிதாரண ஆணைக்குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழு என பல ஆணைக்குழுக்கள் கடந்த கால அரசாங்கத்திலும், மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்திலும் உருவாக்கப்ட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என இதுவரை தெரியாது எனவும், அதனையே இந்த ஆணைக்குழுவிடமும் வினவுவதாகவும், பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி பரணவிதாரண ஆணைக்குழுவின் விசாரணை 2015இல் ஆரம்பிக்கப்பட்டு 22 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவைகள் கொண்ட அறிக்கை உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையின் படி ஒருசில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் நிலையில் அது இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆணைக்குழுக்களில் முதலில் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித வதைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனவும், மனித உரிமை விடயத்தில் இந்த அரசாங்கம் முதலில் செய்ய நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் நிறையவே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசில் பதவி வகிக்கின்றவர்களில் ராஜபக்ச குடும்பத்தினர் 4 அல்லது 5 பேர் அமைச்சரவை அமைச்சர்களாக உள்ளதாகவும், இவர்களில் ஒருவருக்கேனும் தேசிய நல்லிணக்க புனர்வாழ்வு அமைச்சு வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு வழங்கப்பட்டிருக்குமாயின் எதிர்காலத்தில் தேசிய நல்லிணக்க இணக்கப்பாடு விடயத்தினை விரைவாக முன்கொண்டு செல்ல முடியும் என மக்கள் நம்புவார்கள் எனவும், கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேலும் தெரிவித்துள்ளார்.