விரைவில்’திருமண கொத்தணி’ உருவாகும்! – இராணுவத்தளபதி எச்சரிக்கை.

நாளாந்தம் சுமார் 1500 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற போதிலும் , திருமண வைபவங்களை 150 பேருடன் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு மாறாக அதிக எண்ணிக்கையிலானோரின் பங்கேற்புடன் திருமண வைபவங்கள் இடம்பெறுமாயின் நாட்டில் ‘திருமண கொத்தணி’ ஏற்படக் கூடும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் 150 பேருடன் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு அதிகமான எண்ணிக்கையிலானோர் திருமணங்களில் கலந்து கொள்வதாக தெரியவந்துள்ளது.

அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு வழங்கக் கூடிய அதிகபட்ச சலுகைள் வழங்கப்பட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் நாளாந்தம் 1500 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

நாட்டில் மீண்டுமொரு கொவிட் பரவல் அலை ஏற்படக் கூடும் என்று சில மருத்துவ சங்கங்கள் எச்சரித்துள்ளன. எனவே அவ்வாறான அபாயத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். நாட்டில் ஏற்கனவே உருவான இரு கொவிட் பரவல் அலைகளை விட பாரியதொரு கொவிட் பரவல் அலை சித்திரைப் புத்தாண்டின் பின்னர் உருவாகுவதற்கு மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டமையே காரணமாகும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

கொழும்பிற்கு வெளிப்பிரதேசங்களில் நடைபெறும் திருமணங்கள் தொடர்பில் கிடைக்கப் பெறும் தகவல்கள் மகிழ்ச்சிக்குரியவையாக இல்லை. வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அப்பால் அதிகமானோர் திருமண வைபவங்களில் கலந்து கொள்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எதிர்வரும் நாட்களிலும் இவ்வாறு மக்கள் செயற்படுவார்களாயின் வெகுவிரைவில் நாட்டில் ‘திருமண கொத்தணி’ உருவாகும் என்று இராணுவத்தளபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!