சுதந்திரக் கட்சியினருடன் இன்று ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே சிறப்பு கலந்துரையாடல் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர், இராஜாங்க அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் இன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறும் என்று கூறிய துமிந்த திசநாயக்க, கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 14 உறுப்பினர்களுக்கும் கட்சி சார்பாக கலந்துரையாடலில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், கட்சியின் தலைவர், மூத்த துணைத் தலைவர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, பொருளாளர் மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண ஆகியோர் பங்குபற்றுவர்.

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவுடன் இன்று காலை 9.00 மணிக்கு கலந்துரையாடல் நடத்தப்படும் என்று துமிந்தா திசானநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியில் ஒப்புக் கொள்ளப்பட்ட பிரச்சினைகள் மற்றும் ஸ்ரீ.ல.சு.க. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுமென நம்புவதாக அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!