சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்

சிறுவர் மற்றும் மகளிர் விவகார பணியகம் மற்றும் சமூக பொலிஸ் பிரிவு இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, கொழும்பு நகரம் மற்றும் மேல் மாகாணத்திற்குட்பட்ட பகுதிகளில் குறித்த விசேட வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் வகையில் குறித்த பகுதிகளுக்கு அழைந்து வருபவர்கள் மற்றும் பணிக்கமர்த்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!