திடீரென ஆகாயத்திலிருந்து விழுந்த மர்ம பொருள்: பேரதிர்ச்சியில் மக்கள்!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ளது வடக்குப்பட்டு கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55). இவர் நேற்று முன்தினம் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றார். வழியில் ஒரு மர்மப்பொருள் வயல் வெளியில் செங்குத்தாக விழுந்து மண்ணில் புதைந்து நிற்பதை பார்த்தார்.

அது வெடிபொருளாக இருக்கலாம் என நினைத்த அவர் அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் வீரராகவனுக்கு தகவல் தெரிவித்தார். அந்த இடத்துக்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் வீரராகவன் அந்த பொருளை பார்வையிட்டார். அது நவீன வெடிபொருள் போன்று 3 அடி நீளத்திலும், 10 கிலோ எடையுடனும் காணப்பட்டது. அதில் எச்சரிக்கை என ஆங்கிலத்தில் வெள்ளை நிறத்தில் பெரிய எழுத்துக்களில் எழுத்தப்பட்டிருந்தது.

அதில் எலக்ட்ரானிக் பட்டன்கள் ஏராளமாக காணப்பட்டது. மிக உயரத்தில் இருந்து விழுந்த அந்த பொருள் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து கிராம மக்களும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு கருதிய போலீசார் யாரையும் அருகில் அனுமதிக்கவில்லை. தகவலறிந்த செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசீஷ்பச்சாரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதை ஆய்வு செய்தனர். அந்த மர்ம பொருள் 3 அல்லது 4 நாட்களுக்கு முன் தரையில் விழுந்து இருக்கலாம் எனக் கருதிய போலீசார் அதை பாதுகாப்பாக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்,

இது தொடர்பாக அரக்கோணத்தில் உள்ள கடற்படை தளத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று திருக்கழுக்குன்றம் வந்த கடற்படையை சேர்ந்த அதிகாரிகள், அது வெடிபொருள் இல்லை என்றும் அந்த பொருள் கடற்படை விமானத்தில் கொண்டு செல்லும்போது தவறி விழுந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என்று கூறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!