பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கூடாதென பரிந்துரைக்கவில்லை!

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒருபோதும் நீக்கக்கூடாது என ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் எங்கும் பரிந்துரைக்கவில்லை. ஒருசில பத்திரிகைகளில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் முற்றிலும் பொய்யாகும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று கலாநிதி ஜெஹான் பெரேரா சாட்சியமளிக்கையில் இடையில் குறுக்கிட்ட ஆணைக்குழுவின் தலைவர், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கூடாது என இடைக்கால அறிக்கையில் ஆணைக்குழு பரிந்துரை செய்திருப்பதாக ஒருசில இணையத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இது மற்றிலும் பொய்யான செய்தியாகும் என சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து தெளிவுபடுத்துகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆணைக்குழு இரண்டுவிதமான பரிந்துரைகளை செய்திருக்கின்றது. ஒன்று குருகிய கால திட்டம் மற்றது நீண்டகால திட்டம். குருகிய கால திட்டமாக, யாரேனும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டால், அவர் தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் குழு அமைக்கப்படவேண்டும்.

ஆலோசனைக்குழுவின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி குறித்த நபரை தடுப்புக்காவலில் நீண்டகாலம் வைக்காமல் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடல், அதேபோன்று நீண்டகாலம் ஒருவரை தடுப்புக்காவில் வைத்துக்கொண்டிருக்காமல் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால் உடனடியாக வழக்கு தொடுக்கவும் இல்லாவிட்டால் அவரை விடுவிக்கவேண்டும் போன்ற உடடியான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என பரிந்துரை செய்திருக்கின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!