நீர் வழங்கல் திட்டங்களில் உள்ளடக்கப்படாத கிராம பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுத்தருவோம் – மகிந்த ராஜபக்ச

பாரிய நீர் வழங்கல் திட்டங்களில் உள்ளடக்க முடியாத கிராம பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு சமூக நீர் வழங்கல் திட்டம் ஊடாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“விசல் மாத்தளை” நீர் வழங்கல் திட்டம் நேற்று(28) அலரி மாளிகையில் வைத்து இணையத் தொழில்நுட்பம் ஊடாக மக்கள் மயப்படுத்தப்பட்டது. இதன்போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விசல் மாத்தளை நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக மாத்தளை நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கு 24 மணிநேர நீர் விநியோகத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுவதுடன், அதனூடாக நேரடியாக சுமார் 90000 குடும்பங்களைச் சேர்ந்த 354000 பேர் நன்மையடைவர்.

இத்திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் பிரான்ஸின் நிதி உதவியின் கீழ் 31000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதன்போது பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

“நீர் என்பது எமக்கு மிகவும் அத்தியாவசியமானதொன்றாகும். நீர் இருப்பினும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வது என்பது மிகவும் கடினமானதாகும். நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையைச் சமாளிக்க ஒரு அரசாங்கமாக ‘அனைவருக்கும் நீர்’ என்ற ஒன்றிணைந்த திட்டத்தை முன்வைக்க முடிந்தது. கடந்த தேர்தல் காலப்பகுதியில் சில பிரதேச மக்கள் எம்மை சுற்றிவளைத்து குடிநீர்த் தேவை குறித்து எமக்குத் தெரிவித்திருந்தமை நினைவிருக்கிறது. நமக்கு வேறு எதுவும் வேண்டாம் குடிப்பதற்கு நீரைப் பெற்றுத் தாருங்கள் என அவர்கள் கோரினர்.

மாத்தளை பிரதேச மக்களும் அதில் உள்ளடங்குகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்து அது தொடர்பில் ஆராய்ந்தோம். குறிப்பாகக் கிராம மக்களே இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்குப் பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. மக்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

நம் நாட்டில் குறைந்தது பாதிப் பேருக்கேனும் இன்னும் குழாய் மூலமான பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. எமது ஆட்சிக் காலத்தில் சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கடந்த ஆட்சியாளர்களால் அது இடைநிறுத்தப்பட்டமையை நான் புதிதாகக் கூற வேண்டியதில்லை.

அதனால் தான் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் நாம் அதற்காக அதிக இடம் ஒதுக்கி உள்ளோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் அனைத்து மக்களுக்கும் 24 மணிநேரமும் குழாய் மூலம் குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான திட்டங்களை நாடு முழுவதும் ஆரம்பித்தோம். அதில் ஒன்றே நாம் இன்று ஆரம்பிக்கும் விசல் மாத்தளை திட்டம்.

நீர் வழங்கல் சபையின் அதிகாரிகள் தெரிவித்தமைக்கு ஏற்ப நமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, முழு நாட்டிலும் 39 அல்லது 40 சதவிகித மக்கள் மட்டுமே குழாய் நீரைப் பெற்றிருந்தனர். அதனால் முறையான திட்டமிடலுக்கமைய அனைவருக்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான திட்டத்தை அமைச்சர் எமக்கு முன்வைத்தார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் எம்மை சந்திக்க வரும்போது எப்போதும் போன்று நான் இது குறித்து நினைவூட்டுவேன். முழு நாட்டிற்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் திட்டத்திற்கு உதவுமாறு கோரினேன். அவர்களிடமிருந்து அதற்குச் சிறந்த பதில் கிடைத்தது. நாம் அண்மையில் குருநாகல் தேதுறுஓய நீர் வழங்கல் திட்டத்தை மக்கள் மயப்படுத்தினோம்.

அதன் மூலம் பெருந்தொகையான மக்களுக்குக் குழாய் மூலம் நீரைப் பெற்றுக்கொடுக்க முடிந்தது. அதேபோன்று கேகாலை கலிகமுவ, காலி ஹபுகல நீர் வழங்கல் திட்டம் ஆகியவற்றையும் மக்கள் மயப்படுத்தினோம். அத்திட்டங்கள் ஊடாக மாத்திரம் இலட்சக் கணக்கான மக்கள் இன்று சுத்தமான குடிநீரைப் பெற்றுள்ளனர்.

இன்று மக்கள் மயப்படுத்தப்படும் விசல் மாத்தளை நீர் வழங்கல் திட்டமும் எமது ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தின் ஊடாகவும் 90 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3 இலட்சம் பேர் நன்மையடைவர். எதிர்வரும் நான்கு வருடங்களில் 47 இலட்சம் குடும்பத்தினருக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள்.

அதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதியினை ஈடுபடுத்திப் பல நீர் வழங்கல் திட்டங்களை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும். இவ்வாண்டு மாத்திரம் 2 இலட்சத்து 45 ஆயிரம் வீடுகளுக்குப் புதிதாக நீர் விநியோகத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு, 33 திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்கு அமைச்சர் வாசுதேவ உள்ளிட்ட நீர் வழங்கல் அமைச்சு தயாராகவுள்ளது.

இத்திட்டங்களில் பல இறுதிக் கட்டத்தில் காணப்படுகின்றன. இதனால் விரைவில் மேலும் திட்டங்களை மக்கள் மயப்படுத்த எம்மால் முடியும் என்று நாம் நம்புகின்றோம். அன்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது நாம் பல நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்திருந்தோம்.

உரிய நேரத்தில் அத்திட்டங்களை நிறைவு செய்திருந்தால் முழு நாட்டு மக்களுக்கும் இந்நேரத்திற்குச் சுத்தமான குடிநீர் கிடைத்திருக்கும். நாம் ஆரம்பித்தமையால் சிலர் அதனைத் தாமதப்படுத்தினர்.

இன்றேல் இவை இதற்கு முன்னதாகவே மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்கும். மாத்தளை, ரத்தோட்டை, யடவத்த, உக்குவளை, பல்லேபொல, அம்பன்கங்க கோரளை மற்றும் நாவுல பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று முதல் எவ்வித பாதிப்பும் இன்றி சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியும் என நான் நம்புகின்றேன்.

மாத்தளை மட்டுமல்ல. யுத்தம் இடம்பெறும் போது அக்காலப்பகுதியிலேயே தம்புள்ளைக்கும் 10 பில்லியன் ரூபாய் செலவில் விசல் நீர் வழங்கல் திட்டத்தைப் பெற்றுக் கொடுத்தோம்.

தம்புள்ளை மற்றும் கலேவெல பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமின்றி பொலன்னறுவை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஹபரன, கெகிராவ, பலாகல மற்றும் பலுகஸ்வெவ ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீர் இன்றி தவித்த கிராம மக்களுக்கும் அதனூடாக பலன் கிட்டியது. அது மாத்திரமன்றி வில்கமுவ மற்றும் லக்கலவிலும் மேலும் இரு நீர் வழங்கல் திட்டங்கள் நிறைவடையும் தறுவாயில் காணப்படுவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இத்திட்டங்களை அனைத்தும் நிறைவடையும் போது மாத்தளை மாவட்டத்தில் 90 வீதமானோருக்குச் சுத்தமான குடிநீருக்கான தேவை பூர்த்திசெய்யப்படும். நீர் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட வளமாகும். அந்த வளமும் தற்போது மாசுபடுத்தப்பட்டு வருகிறது.

அதனாலேயே மக்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. குழாய் மூலமான சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் பாரியளவு செலவிடுகிறது. இதனால் நீரை வீண் விரயமின்றி பயன்படுத்த வேண்டும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நம் நாட்டில் உள்ள ஆறுகளும் மாசடைந்து வருகின்றன. சுரகிமு கங்கா திட்டத்தின் கீழ் அந்த ஆறுகளில் பதினேழு ஆறுகளைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கும் நாங்கள் சமீபத்தில் திட்டங்களை ஆரம்பித்தோம்.

நாம் பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் குறித்துப் பேசினாலும், இப்பாரிய திட்டங்களில் உள்ளடக்க முடியாத கிராம பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு சமூக நீர் வழங்கல் திட்டம் ஊடாக சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம். எனவே, உங்கள் கிராமத்திற்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் திட்டத்தை நாங்கள் ஏற்கனவே முடித்துவிட்டோம் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அதுமாத்திரமன்றி, நாடளாவிய ரீதியில் 40 சதவிகிதமாகக் காணப்படும் குழாய் நீர் வழங்கலை 2025ஆம் ஆண்டளவில் 80 சதவிகிதமாக அதிகரிப்பதே எமது இலக்கு. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் விடுமுறை நாளான கடந்த ஜூலை 3, சனிக்கிழமையன்று எவ்வித சம்பளத்தையோ கொடுப்பனவையோ எதிர்பார்க்காது தன்னார்வத்துடன் சமூகத்தினருடன் இணைந்து குழாய்களை நிறுவி நாட்டிற்கு 20 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளனர்.

நீண்ட காலமாகச் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்த மக்களுக்காகத் தன்னார்வத்துடன் தொண்டு செய்வதே அந்நேரத்தில் அவர்களின் நோக்கமாக இருந்தது. நாங்கள் அதை ஒரு உன்னதமான காரணியாகக் கருதுகிறோம். அதனால் உங்களது ஆதரவுடன் எதிர்பார்த்த காலத்திற்கு முன்னர் முழ நாட்டு மக்களுக்கும் குழாய் மூலமாகப் பாதுகாப்பான நீரை வழங்க முடியும் என நம்புகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ஜனக பண்டார தென்னகோன், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹண திசாநாயக்க, பிரமித்த பண்டார தென்னகோன், நாலக பண்டார கோட்டேகொட, கயாஷான் நவநந்து, பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவெத்து, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ச, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்துல விக்ரம, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க, மாத்தளை மேயர் சந்தமன் பிரகாஷ் மற்றும் பிரதேச சபை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!