ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிவரும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு, போக்குவரத்து இராஜாங்க அமைச்சினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிக அளவிலான பயணிகள் பயணித்துள்ளமை குறித்து கடந்த நாட்களில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிவரும் அனைத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளையும் சோதனைக்கு உட்படுத்துமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார நடைமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறிப்பிட்ட நடைமுறைகளை இன்று முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துமாறும், போக்குவரத்து இராஜாங்க அமைச்சினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கட்டணங்களுக்கு மேலதிகமாக எந்தவொரு கட்டணமும் பஸ்களில் அறவிடப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நிலைமையின் கீழ் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலேயே பஸ் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, கொரோனா தொற்று நிலைமையின் கீழ் இயங்கும் பஸ் சேவைகளின் கட்டணங்களை 1 தசம் 2 வீதத்தால் அதிகரிக்க குறித்த சந்தர்ப்பத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!