இயல்பு வாழ்க்கையை பாதித்த கனமழை: தவிக்கும் வடமாநிலங்கள்!

தென்மேற்கு பருவமழை சமீப நாட்களாக வட மாநிலங்களை புரட்டிப்போட்டு வருகிறது. மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம் என பல மாநிலங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தொடர் மழையால் மேற்படி மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதில் கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன.

பல நாட்களாக பெய்து வரும் மழையால் முக்கியமான அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அவை திறந்து விடப்பட்டு இருக்கின்றன. இதுவும் வெள்ளப்பெருக்குக்கு காரணமாகி உள்ளது.

அந்தவகையில் மேற்கு வங்காளத்தில் துர்காபூர் நீர்த்தேக்கம் மற்றும் தாமோதர் பள்ளத்தாக்கு கழக அணைகள் திறப்பால் ஹவுரா உள்ளிட்ட 6 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. மாநிலத்தில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

வெள்ளம் பாதித்த ஹவுரா மாவட்டத்தின் பல பகுதிகளில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் வெள்ள மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்காளத்தில் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடி நேற்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது மாநிலத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதியளித்தார். வெள்ள சேதம் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக மம்தாவும் பிரதமரிடம் கூறினார்.

இதைப்போல மத்திய பிரதேசமும் தொடர் மழையில் சிக்கி பெருத்த சேதத்தை சந்தித்து இருக்கிறது. அங்கும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது.

மத்திய பிரதேசத்திலும் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் சுமார் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் சிவ்புரி மாவட்டத்தில் மட்டுமே 7 பேர் பலியாகி உள்ளனர்.

மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. இதைப்போல நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

மாநிலத்தின் வெள்ள சேதம் மற்றும் நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு எடுத்துரைத்தார். அப்போது மாநிலத்துக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக பிரதமர் உறுதியளித்தார்.

முன்னதாக உள்துறை மந்திரி அமித்ஷாவிடமும், மத்திய பிரதேச மழை சேதம் குறித்து சிவராஜ் சிங் சவுகான் எடுத்துக்கூறினார்.

இதற்கிடையே ராஜஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பண்டி மாவட்டத்தின் நவ்காட் பகுதியில் பழமையான வீடு ஒன்று நேற்று முன்தினம் இரவில் இடிந்து விழுந்தது.

இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேரை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடந்தது.

இவ்வாறு வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!