நீல நிறமாக மாறிய உடல்: குளிர்பானம் குடித்த சிறுமி துடிதுடித்து உயிரிழப்பு: அதிர்ச்சி பின்னணி!

தமிழகத்தில் காலாவதியான குளிர்பானத்தை வாங்கிக் குடித்த 13 வயது சிறுமி, உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கப்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்த தரணி. 13 வயதான இவர் பெசண்ட் நகரிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு விடுமுறைக்காக சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் அங்கிருந்த மளிகைக் கடையில் Togito Cola என்ற குளிர்பானத்தை வாங்கி குடிக்க, அடுத்த சில மணி நேரங்களிலே அவர் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்.

அதன் பின், கைவிரல், நாக்கு என உடல் நீல நிறமாக மாறியதோடு, மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வந்து சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமி மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இருப்பினும், சிறுமியின் முழு பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் உயிரிழப்பிற்கான மொத்த காரணமும் தெரியவரும் என கூறிய பொலிசார், சிறுமி குடித்த குளிர்பானம் காலாவதியானது என்பது தெரியவந்துள்ளது.

சிறுமி குடித்த அந்த குளிர்பானபாட்டிலில் காலாவதியாகும் திகதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குளிர்பானம் வாங்கப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

சிறுமி அருந்திய காலாவதியான குளிர்பானம் போன்று மேலும் சில குளிர்பான பாட்டில்கள் இருப்பதை பறிமுதல் செய்தனர்.

காலாவதியான குளிர்பானத்தை விற்றதால் கடை உரிமையாளர் மீதும், குளிர்பான தயாரிப்பு நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, சட்ட நடவடிக்கைக்கும் காவல் துறைக்கு பரிந்துரைக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!