ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பிய ஹெலிகாப்டரை கைப்பற்றிய தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா பரிசளித்த Mi-35 ரக ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ள, குண்டூஸ் (Kunduz) நகர விமான தளத்தில், எம்ஐ -35 ஹெலிகாப்டர் ஒன்று தாலிபான்களால் கைப்பற்றப்பட்டதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்புப் படைகளிடமிருந்து தலிபான்களால் கைப்பற்றப்பட்ட இந்த ஹெலிகாப்டர், சில ஆண்டுகளுக்கு முன்பு, போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் திறனை வலுப்படுத்தும் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா பரிசாக வழங்கிய ஹெலிகாப்டர்களில் ஒன்றாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்திய பாதுகாப்பு படைகள் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

குண்டூஸ் விமானநிலையத்திலிருந்து வெளியான வீடியோவில், அந்த ஹெலிகாப்டர் ரோட்டர்கள் இல்லாமல் செயலிழந்து நிற்பது போன்று தெரிகிறது. ஹெலிகாப்டரின் வரிசை எண் 123 இருக்கிறது, இது இந்தியாவால் வழங்கப்பட்ட ஹெலிகாபர்களைப் போன்று இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!