வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்கள் – பாதுகாப்பு கடமையில் இராணுவம் மற்றும் பொலிஸ்

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கடுமையான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மக்கள் வீட்டிற்குள்ளேயே இன்றைய தினம் முடங்கியதால் நாட்டின் பல பகுதிகள் வெறிச்சோடியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார்
மன்னார் மாவட்டம் மக்கள் நடமாட்டம் இன்றி முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அரச, தனியார் போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

எனினும் நடமாடும் அத்தியாவசிய சேவைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு
கோவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாக முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகள், ஆடைத் தொழிற்சாலைகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் முடங்கியுள்ளதைக் காணமுடிகின்றது.

பொது போக்குவரத்துகளின் சேவைகளும் நடைபெறவில்லை.

இதேநேரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறிய வகையில் செயற்படுவோரைக் கண்டறியும் வகையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் இன்று காலை முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அனைத்து வீதிகளிலும் பொலிஸார் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறுவோரைக் கண்டறியும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

மலையகம்
மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறிச் செயற்பட முற்பட்ட சிலர், பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், முகக்கவசம் அணியாமை உட்படத் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

மலையக நகர்ப் பகுதி இவ்வாறு முடக்கப்பட்டிருந்தாலும் தோட்டப்பகுதிகளில் இயல்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலைக்குச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான நிலை தற்பொழுது காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மிகக் குறைவாகக் காணப்படுவதுடன், அத்தியாவசிய தேவைகள் மாத்திரம் இடம்பெறுகிறது. வீதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையற்ற நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஏ9 வீதியுடன் இணையும் வீதிகள் அனைத்திலும் படையினர் நிறுத்தப்பட்டு நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை.