“எங்கள் குடும்பங்களுக்கு உதவுங்கள்” – பாரிஸில் ஆப்கானிஸ்தானியர்கள் போராட்டம்!

ஆப்கானிஸ்தானில் அச்சுறுத்தப்பட்ட தங்கள் குடும்பங்களை “உடனடியாக வெளியேற்ற” கோரி பல ஆப்கானியர்கள் ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

காபூலில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதால் அந்த விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மக்களும் குவிந்துள்ளனர்.

இந்தியா, அமேரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களுடன், தங்கள் நாட்டுக்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் மற்றும் புகலிடம் தேடி வரும் ஆப்கான் மக்களையும் விமானங்களில் வெளியேற்றி வருகின்றனர். இதுவரை அமெரிக்கா மட்டும் 33,000 பேரை வெளியேற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வாரத்தில் காபூலில் இருந்து ஐந்து விமானங்களில் சுமார் 600 ஆப்கானியர்களை பிரெஞ்சு இராணுவம் ஏற்றிச் சென்றது. 6-வது விமானம் ஞாயிற்றுக்கிழமை புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரான்சில் உள்ள ஆப்கானியர்கள், தங்கள் குடும்பங்களை ஆப்கானிஸ்தானிலிருந்து “உடனடியாக வெளியேற்ற” கோரி பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல பிரெஞ்சு மக்களும் ஆர்ப்பாட்டத்தை ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “நாங்கள் எங்கள் குடும்பங்களுக்காக இங்கே இருக்கிறோம், அவர்கள் அங்கு பாதுகாப்பாக இல்லை… அவர்கள் அங்கேயே தங்கினால் அவர்கள் இறந்துவிடுவார்கள்” என தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!