உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குறித்த அறிக்கைகள் ஆதாரமற்றவை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து பல்வேறு தரப்பினரின் அறிக்கைகள் ஆதாரமற்றவை என்று காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அத்தகைய அறிக்கைகளை வெளியிடுபவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று காவல்துறை மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிலர் இந்த தாக்குதல்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும் குறித்த கருத்துக்களின் உள்ளடக்கம் குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டநிலையில் அவை ஆதாரமற்றவை என்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் முன் எடுத்துச் செல்லக்கூடிய உண்மைகளை பொதுமக்கள் வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன், குற்றப் புலனாய்வுத் துறைக்கு தகவல் அளிக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

2019 இல் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினர் நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு குற்றம் அல்ல என்றும் விசாரணையில் அது நன்கு திட்டமிடப்பட்ட பயங்கரவாதச் செயல் என்று தெரியவந்தது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முழு இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு தகவல்களை வெளிப்படுத்துவது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கலாம் என்றும் காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பாக 723 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது காவலில் அல்லது தடுப்பு உத்தரவின் கீழ் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து 100,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்கள் விசாரிக்கப்பட்டதாகவும், 365 மில்லியன் ரூபா உட்பட்ட மற்றும் சொத்துக்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!