அமெரிக்க மத்தியஸ்தம் – அழைப்பு விடுத்தாரா சுமந்திரன்?

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்துடனான பேச்சுக்களில் அமெரிக்க மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென தான் தெரிவித்ததாக வெளியாகும் செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நிராகரித்துள்ளார்.

உள்ளூர் ஊடகமான தி ஐலண்ட் பொய்யான தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டுமெனவும், அந்த தீர்வுகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் மத்தியஸ்தராக அமெரிக்கா இருக்க வேண்டும் எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளதாக தி ஐலண்ட் செய்தி வெளியிட்டது.

மேலும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த முன்மொழிவுகளுக்கு ஆதரவைப் பெறுவதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பெச்லெட் பதவியில் இருப்பது பெரும் நன்மை என சுமந்திரன் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி முற்றிலும் பொய்யானது எனவும், தான் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவில்லை எனவும் எம்.ஏ சுமந்திரன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தி ஐலண்ட் பத்திரிகையில் குறித்த செய்திக்கு பொறுப்பான தினசேன ரத்துகமகே இவ்வாறு பொய்யான செய்தியை வெளியிடுவது இது முதன்முறை அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தி ஐலண்ட் அவதானம் செலுத்த வேண்டுமெனவும், தவறான செய்தியை பிரசுரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எம்.ஏ சுமந்திரன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!