ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியது யார்? -கேட்கிறார் நாமல்

நாடாமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்‌ச ​குறித்து வெளியான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்று தெளிவுபடுத்துமாறு நாமல் ராஜபக்‌ச கோரியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்‌சவுக்கு 7.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சீனாவினால் நிதி அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றதாக நியூயோர்க் டைம்ஸ் அணமையில் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் பின்னர் குறித்த செய்தியை வெளியிட ஒத்தாசையாக இருந்த இலங்கை ஊடகவியலாளர்களை மஹிந்த ராஜபக்‌சவுக்கு நெருக்கமான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் மீண்டுமொரு செய்தியை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை பிரசுரித்துள்ளது.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு ​பேரும் யார் என்பதை தெளிவுபடுத்துமாறு நாமல் ராஜபக்‌ச எம்.பி. சவால் விட்டுள்ளார். தங்கள் தரப்பில் யாரும் அவ்வாறு அச்சுறுத்தவில்லை என்றும் ஆனாலும் தான் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஆகியோர் குறித்த செய்தி தவறானது என்று விமர்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனம் மற்றும் அச்சுறுத்தலுக்கு வித்தியாசம் தெரியாத நிலையில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை நிர்வாகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவிரவும் இப்படி அனாமதேய செய்திகளை வெளியிடுவதன் மூலம் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படுவதாகவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!