விக்கி, சிவாஜி, விஜயகலாவுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டுமாம்! – ரஞ்சன் ராமநாயக்க கோருகிறார்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மனத்தாக்கத்தில் கூறியிருந்தாலும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

‘விஜயகலாவின் பொறுப்பற்ற கருத்து பரிமாற்றமானது அவர் சுயநினைவின்றி இருந்ததை உணர முடிகிறது. இவ்வாறான விடயத்தை பதற்றத்தில் கூறினாலும் அது பிழையான விடயமாகும். 30 வருட யுத்தத்தின் போது பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் தற்போது சுதந்திரமடைந்துள்ளோம்.

இந்த நிலையில் மீண்டும் அவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்த முயற்சிப்பது தவறாகும். எனினும் அவர் இப்படியொரு விடயத்தை தெரிவிப்பது இதுவல்ல முதல் தடவை. இப்படியான கருத்துக்களை சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன் போன்றோரும் கூறி வருகின்றனர்.

ஆனால் விஜயகலா போன்றோர் யாழில் ஒன்று சொல்கிறார்கள். கொழும்பில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வேறொன்றை சொல்கிறார்கள். அத்துடன், சிலர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரை ஐயா என அழைக்கிறாரகள். ஆனால் நான் ஆயுதமேந்திய போராளிகளை ஒருபோதும் ஐயா என அழைக்கமாட்டேன். மகாத்மா காந்தி, ஆப்ரகாம் லிங்கன் போன்றோரையே நான் ஐயா என அழைப்பேன்.

இன்று எவரும் இன்னுமொரு யுத்தத்தை எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்.

அதுமட்டுமல்லாமல் இவ்வாறான சிந்தனையிலிருக்கும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைத்து புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நல்லாட்சி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!