ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த டிரம்ப்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் கணக்கை மீட்டெடுக்க அந்நிறுவனத்தை கட்டாயப்படுத்துமாறு புளோரிடாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில் 2020 நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்.

ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தார். அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினார்கள்.

இதில் கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்குள் புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு வெள்ளை மாளிகை காவல் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த வன்முறைக்கு டிரம்ப்பின் பேச்சுக்களே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது. பின்னர் அவரது ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவதாக அறிவித்தது.

மேலும் யூடியூப், பேஸ்புக் போன்ற மற்ற சமூக வலை தளங்களும் தடை விதித்தன. இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் ட்விட்டர், கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களை எதிர்த்து டிரம்ப் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தனது டிவிட்டர் கணக்கை மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி டிரம்ப் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் அரசியலை ஆக்கிரமிக்கும் வகையிலும் முன் எப்போதும் இல்லாத வகையிலும் ஜன நாயகத்துக்கு எதிராக இருக்கிறது.

தாலிபான்கள் கூட சுதந்திரமாக ட்விட்டரில் பதிவுகளை இடுவதற்கு ட்விட்டர் நிர்வாகம் அனுமதிக்கிறது. ஆனால் நான் அதிபராக இருந்த போது எனது டிவீட்களை போலியான தகவல்களை கொண்டவை என்று தொடர்ந்து முத்திரை குத்தியது என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!