திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பெற முடியாது!

திருகோணமலை எண்ணெய் குதங்களை புதிதாக இந்தியாவிற்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எம்மிடமிருந்த நூறு எண்ணெய்க்குதங்களையும் இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இந்தியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் எண்ணெய் குதங்களை எந்த வகையிலேனும் எமது வசப்படுத்தும் போராட்டத்தையே நான் முன்னெடுத்து வருகின்றேன் என வலுசக்தி அமைச்சர் உதயகம்பன்பில சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விவகாரங்கள், கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

எண்ணெய் குதங்கள் குறித்து கடந்த சில நாட்களில், அடிப்படை நியாயமற்ற உண்மைக்கு புறம்பான காரணிகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிவிவகார செயலாளர் என்னை சந்திக்க அழைப்பு விடுக்கவும் இல்லை. அவ்வாறு அவரை சந்திக்க வேண்டிய தேவையும் எனக்கு ஏற்படவில்லை.

அதேபோல் குத்தகைக்கு அல்ல, நிரந்தரமாகவே இந்தியாவிற்கு எண்ணெய்க்குதங்களை நாம் கொடுத்துவிட்டோம். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி ஆகியோருக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் இரண்டாம் பிரிவின் மூன்றாம் உப பிரிவில் இது மிகத் தெளிவாக கூறப்படுகின்றது.

இலங்கையின் எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் இணைந்தே அபிவிருத்தி செய்ய முடியும் என மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டும் 2003 ஆம் ஆண்டும் எமது எண்ணெய்க் குதங்களை முழுமையாக இந்தியாவிற்கு கொடுத்துவிட்டனர். ஆகவே புதிதாக இனி இந்தியாவிற்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை, கொடுத்தவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ளவே நான் போராடிக்கொண்டுள்ளேன். இதற்கு எதிராக என்னை விமர்சிக்கும் நபர்கள் இந்திய உடன்படிக்கையை முன்னெடுத்து வருகின்றனர் என்பதே அர்த்தமாகும்.

இந்த உடன்படிக்கை 20ஆண்டுகளுக்கு செய்துகொள்ளப்பட்ட ஒன்றல்ல. 35 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும். அதற்கு பின்னரும் இந்தியாவின் வசமே இவை இருக்கும் எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இந்தியாவுடன் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டுடன் நிறைவுப் பெறும்.என எதிர்தரப்பினர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு அமைய திருகோணமலை எண்ணெய்தாங்கிகள் இந்தியாவிற்கு நிரந்தரமாக வழங்கப்பட்டுள்ளது. என்பதே உண்மை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!