மாணவர் ஆலோசனை ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு! விரைவில் நியமனம் என்கிறது அமைச்சு!

மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த நிலையில் இதுவரையில் நியமனம் கிடைக்காதவர்களுக்கு விரைவில் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. ரோஹிணி குமாரி விஜேரத்ன எழுப்பிய மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் கூறுகையில்,
மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு 8 ஆயிரத்து 334 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 6 ஆயிரத்து 746 பேர் சித்தியடைந்துள்ளனர்.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் இவர்களில் சிலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படாதவர்களுக்கு விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!