நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை! – திருக்குமார் நடேசன்

நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் கிடையாது என முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரான திருக்குமார் நடேசன் (Thirukumar Nadesan) தெரிவித்துள்ளார்.

பண்டோரா ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து, நிருபமா ராஜபக்ச (Nirupama Rajapaksa) மற்றும் கணவரான திருக்குமார் நடேசன் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

எனினும், தாம் நாட்டை விட்டு வெளியேறவில்லை என திருக்குமார் நடேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாங்கள் வேறு எந்த நாட்டிற்கும் ஓடவில்லை, நாங்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு சுயாதீன விசாரணைக்கு நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.
ஆகையினால் நானும் என் மனைவியும் ஏன் வெளியேற வேண்டும்? இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை” என திருக்குமார் நடேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டோரா ஆவணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க திருக்குமார் நடேசன் (Thirukumar Nadesan) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்றைய தினம் முன்னிலையாகியிருந்தார்.

கருப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ளது.
இதில், இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் (Nirupama Rajapaksa) பெயரும் இடம்பெற்றுள்ள நிலையில், கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!