“படிப்பறிவில்லாத மக்கள் இந்தியாவின் மீதான சுமை” – மத்திய அமைச்சர்!

படிப்பறிவில்லாத மக்கள் இந்தியாவின் மீதான சுமை. ஒரு படிப்பறிவு இல்லாத நபர் இந்தியாவின் சிறந்த குடிமகனாக இருக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சன்சாத் டிவி-க்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது; “தேசத்தின் நலனுக்காக தைரியமான முடிவுகளை எடுக்க பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் தயங்குவதில்லை. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, சில சமயங்களில் கட்சியின் ஆதரவாளர்களைப் பற்றி கவலைப்படாமல் பிரதமர் எப்போதும் முடிவுகளை எடுப்பார்.

படிப்பறிவில்லாத நபர் நாட்டிற்கு சுமை. அவருக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்ட உரிமைகள் தெரியாது, அல்லது அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கடமைகள் என்னவென்றும் தெரியாது. அத்தகைய நபர் எப்படி ஒரு நல்ல குடிமகனாக இருக்க முடியும்..?

அதனால், படிப்பறிவு வழங்குவது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும். குஜராத் மாநில பள்ளிகளின் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி பற்றிய புள்ளிவிவரங்கள் அறிக்கையின்படி, மாநிலத்தில் இடைநிலைக் கல்வியில் இடைநிறுத்தம் 13.34 சதவீதமாக உள்ளது.

குஜராத் மாநிலத்தின் கல்வியறிவு வளர்ச்சிக்காக பாடுபட்ட பிரதமர் மோடி இப்போது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!